சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் அருகே குப்பைகள் எரிந்து தீ விபத்து

திருவொற்றியூர்: மணலி சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் அருகே குப்பைகள் எரிந்து தீ விபத்து எற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் கச்சா எண்ணெய் தரம் பிரிக்கப்பட்டு விநியோகிக்கபட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து குழாய் வழியாக 15 கிலோமீட்டர் தூரத்திற்கு மணலில் சிபிசிஎல் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. மேலும், அருகே உள்ள தொழிற்சாலையின் பிற பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் தரம் பிரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், தார் போன்றவை கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் நவீன தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று அதிகாலை இந்திரா நகர் பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் அருகே குவிந்துகிடந்த குப்பைகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பற்றி எரிந்த தீ அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பரவி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து 7 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கச்சா எண்ணெய் குழாய் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்து உடனே கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய அளவில் தீ விபத்து தவிர்க்கப்பட்டதாக சிபிசிஎல் அதிகாரிகள் தெரிவித்தனர். கஞ்சா எண்ணெய் குழாய் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: