1 லட்சம் கட்டிடங்களில் ஸ்மார்ட் தண்ணீர் மீட்டர்கள்: இதுவரை 22,000 கட்டிடங்களில் பொருத்தப்பட்டது

சென்னை: சென்னையில் ஒரு லட்சம் கட்டிடங்களில் ஸ்மார்ட் தண்ணீர் மீட்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக சென்னை நகரில் சுமார் ஒரு லட்சம் கட்டிடங்களில் ஸ்மார்ட் தண்ணீர் மீட்டர்கள் விரைவில் பொருத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு கட்டிடமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறது என்பதை நேரடியாக கண்காணிக்க முடியும். சென்னை மெட்ரோ வாட்டர் வாரியம் இந்த மாத இறுதிக்குள் இதற்கான டெண்டர்களை முடிக்க உள்ளது. முதல் கட்டமாக, அதிகமாக தண்ணீர் பயன்படுத்தும் இடங்களில் இந்த மீட்டர்கள் பொருத்தப்படும். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பலமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் இவை முதலில் வரும். 2,500 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய வீடுகளிலும் இந்த மீட்டர்கள் பொருத்தப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.392.59 கோடி செலவாகும்.

இந்த திட்டம் 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் விரிவான ஆய்வு, நல்ல தரமான மீட்டர்களுக்கு காத்திருப்பு, டெண்டர் வேலைகள் போன்ற காரணங்களால் சற்று தாமதமானது. தற்போது சென்னை நகரில் 17 லட்சம் பேருக்கு மெட்ரோ வாட்டர் வழங்கப்படுகிறது. இதுவரை 22,000 கட்டிடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. இந்த புதிய மீட்டர்கள் IoT என்ற நவீன தொழில்நுட்பத்துடன் வரும். இதில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினோம் என்பதை சரியாக கணக்கிட்டு, அதற்கு மட்டுமே மாதாந்திர பில் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் சில மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் தண்ணீர் வராத இடங்களில் இது எப்படி வேலை செய்யும்.

சாக்கடை நீர் குடிநீரில் கலக்கும் பிரச்னை உள்ள இடங்களில் என்ன செய்வது, முதலில் தண்ணீர் குழாய்களையும் சாக்கடை குழாய்களையும் சரி செய்த பிறகு இந்த மீட்டர்களை பொருத்த வேண்டும், என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த திட்டம் ஹைப்ரிட் அனுயிட்டி மாடல் முறையில் செயல்படுத்தப்படும். இதில் அரசாங்கம் ஒரு பங்கு பணம் கொடுக்கும். ஒப்பந்தக்காரர் மீட்டர்களை பொருத்துவார், ரீடிங் எடுப்பார், 15 ஆண்டுகள் பராமரிப்பார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்த திட்டம் தொடங்கும். இது சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் முக்கிய பகுதியாகும். தண்ணீரை திறமையாக பயன்படுத்துவதும், வீணாகும் தண்ணீரை குறைப்பதும் இதன் நோக்கம். 2027க்குள் 80 சதவீத வீடுகளில் இந்த மீட்டர்களை பொருத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: