₹11 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை திருவிழாக்கள் எதிரொலியால் விலை உயர்வு ஒடுகத்தூர் வாரச்சந்தையில்

ஒடுகத்தூர், மே 18: ஒடுகத்தூரில் திருவிழாக்கள் எதிரொலியாக ஆடுகளின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. மேலும், வரத்து அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் ₹11 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் வாரந்தோறும் ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதே நேரத்தில் திருவிழா நாட்களில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பதும், புரட்டாசி மாதங்களில் சில லட்சங்களுக்கு மட்டுமே விற்பனை நடப்பதும் வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை ஆட்டுச்சந்தை கூடியது. ஆடுகள் வரத்து 2, 3 வாரமாக குறைவாகவே இருந்தது. ஆனால், நேற்று ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது, பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் நேர்த்திக்கடனுக்காகவும், வேண்டுதலுக்காகவும், சுவாமிக்கு பலியிடவும் ஆடுகளை வாங்க காலை முதலே சந்தையில் கூட்டம் களைகட்டியது. இதன் காரணமாக வியாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை விற்பனை செய்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு ஜோடி ஆட்டின் விலை கிடுகிடு என்று உயர்ந்து ₹25 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த இரண்டு வாரமாகவே ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும், கால்நடைகளுக்கு நோய் தொற்று இருப்பதாக பரவிய வதந்தியின் காரணமாக ஆடுகள் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், திருவிழாக்கள் தொடங்கியுள்ளதால் ஆடுகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகளும் ஆடுகளை விற்று நல்ல லாபம் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஒரே நாளில் மட்டும் ₹11 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது என்றனர்.

The post ₹11 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை திருவிழாக்கள் எதிரொலியால் விலை உயர்வு ஒடுகத்தூர் வாரச்சந்தையில் appeared first on Dinakaran.

Related Stories: