வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனிடையே நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர் குறித்த ரகசியங்கள் மீறப்படுவதாக அக்னோஸ்டோஸ் தியோஸ் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “வாக்குச் சாவடி தலைமை அதிகாரியால் வாக்குப் பதிவு ஒப்புகை சீட்டுகள் மற்றும் வாக்குச் சாவடியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை பார்க்க முடியும்.

இதன் மூலம் எந்த வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் மீறப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான ஏப்ரல் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனுதாரர் படித்து பார்க்கவில்லை. அதை படித்திருந்தால் இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருக்க மாட்டார். எந்த வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்கு செலுத்தினார் என்பதை வாக்குச் சாவடி தலைமை அதிகாரியால் அறிய முடியாது. ஏப்ரல் 26ம் தேதி தீர்ப்பின்படி செல்லுங்கள்” என்று தெரிவித்தனர். தொடர்ந்து “வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக தொடரப்பட்ட மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

The post வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: