டயர் வெடித்த கார் மோதி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ * தடுப்பு கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது * காயமடைந்த டிரைவர் உட்பட 2 பேருக்கு சிகிச்சை வேலூர் காகிதப்பட்டறையில் பரபரப்பு

வேலூர், மே 16: வேலூர் காகிதப்பட்டறையில் கார் டயர் வெடித்து ஆட்டோ மீது மோதிய விபத்தில், ஆட்டோ 20 அடி ஆழ பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சுந்தரம்(50), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை வேலூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். திருவலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(35). இவர் தனது காரில் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்தார். காகிதப்பட்டறை டான்சி அருகே வந்தபோது காரின் முன் பக்க வலது புற டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, எதிரே வந்த சுந்தரத்தின் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அருகில் உள்ள 20 அடி ஆழ பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு மகளிர் தங்கும் விடுதி செல்லும் சாலையில் பாய்ந்து, நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளின் மீது மோதி அந்தரத்தில் நின்றது. ஆட்டோவில் பயணித்த பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணன் (50), டிரைவர் சுந்தரம் ஆகியோர் காயமடைந்தனர். இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் டிரைவர் ராஜேஷ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post டயர் வெடித்த கார் மோதி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ * தடுப்பு கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது * காயமடைந்த டிரைவர் உட்பட 2 பேருக்கு சிகிச்சை வேலூர் காகிதப்பட்டறையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: