பலே திருடன் பதுக்கிய ₹8 லட்சம் மதிப்பு லேப்டாப்கள் பறிமுதல் கேரளா தனிப்படை போலீசார் அதிரடி பேரணாம்பட்டு அருகே வீட்டில்

 

பேரணாம்பட்டு, மே 27: பேரணாம்பட்டு அருகே வீட்டில் பலே திருடன் பதுக்கிய ₹8 லட்சம் மதிப்பிலான 9 லேப்டாப்களை கேரளா போலீசார் பறிமுதல் செய்தனர். ேமலும் தப்பியோடிய திருடனை தேடி வருகின்றனர். கேரளா மாநிலம் கொச்சினில் கடந்த 16ம் தேதி தனியார் நிறுவனத்திற்குள் மர்ம ஆசாமி புகுந்து ஒன்பதுக்கும் மேற்பட்ட லேப்டாப்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கம்பெனியின் நிறுவனர் கேரளா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கேரளா போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில், இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்(40) என்பவர் என்பதும், இவர் மீது கேரளா மற்றும் கர்நாடகாவில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து நேற்று மேல்பட்டி காவல் நிலையத்திற்கு கேரளா மாநிலத்திலிருந்து கமிஷனர் தனிப்படை குழுவினர் எஸ்ஐ பதர் மற்றும் 5க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். பின்னர் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் மற்றும் கேரளா குழுவினர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு போலீசாரை கண்டதும் கோவிந்தன் தப்பி ஓடிவிட்டார். மேலும் அவரது வீட்டினை சோதனை செய்தபோது அங்கு ஒன்பது லேப்டாப்களை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய கோவிந்தன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

The post பலே திருடன் பதுக்கிய ₹8 லட்சம் மதிப்பு லேப்டாப்கள் பறிமுதல் கேரளா தனிப்படை போலீசார் அதிரடி பேரணாம்பட்டு அருகே வீட்டில் appeared first on Dinakaran.

Related Stories: