ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழக அரசின் தடுப்பூசி மையத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே நீர் மோர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென்அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலைத் தடுப்பதற்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow fever Vaccine) செலுத்த வேண்டுமென்பது விதி. இந்த ஊசி செலுத்திச் சென்றால் மட்டுமே விமான நிலையங்களில் அந்த நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி கிடைக்கும்.

அதேபோல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு திரும்பும் போதும் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே நம் நாட்டிற்கு வருவதற்கு அனுமதிப்பார்கள். இந்த நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தில் கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அத்துடன் தனியார் மருத்துவமனைகளிலும் கூட மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, பலர் தனியார் மருத்துவமனையில் இந்த ஊசியை செலுத்திக் கொண்டு, ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென்அமெரிக்க நாடுகளுக்கும் செல்லுகிற நிலை இருக்கிறது. இதில் பெரிய குறைபாடு வெளிநாடுகளுக்குச் செல்லும் போது விமான நிலையத்தில் விமான நிலைய நிர்வாகத்தினர் இதை அனுமதிப்பது இல்லை.

எனவேதான் தமிழகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையத்தை விரிவாக்கம் செய்து, தமிழகத்தில் கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகம், துறைமுகம் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள மருத்துவ மையம், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மருத்துவ மையம் ஆகிய மூன்று இடங்களில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திய பிறகு ஆப்பிரிக்க மற்றும் தென்அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒன்றிய அரசின் நிதியும், மாநில அரசின் நிதியும் சேர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் பயனாளர்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது. இது விரைவாக வழங்குவதற்கு மருத்துவத் துறையின் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஜுன் 6ம் தேதிக்குப் பிறகு இது குறித்து நாங்கள் ஒன்றிய அரசின் அதிகாரிகளோடு பேசி, விரைந்து மருத்துவ உதவித் தொகை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வோம். மேலும் இந்தாண்டு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 137 மாணவர்கள் மட்டும், மன வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவத் துறையின் சார்பில் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழக அரசின் தடுப்பூசி மையத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: