சென்னை: அனுமதி இல்லாமல் சிறப்பு ரயில்களை இயக்க கூடாது என ரயில்வே நிர்வாகம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய ரயில்வே போர்டு சமீபத்தில் ஒரு முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது. இனி எந்த சிறப்பு ரயிலும் (டிரெயின் ஆன் டிமெண்ட் – டீஒடி என்று அழைக்கப்படும் தேவைக்கேற்ப இயக்கப்படும் ரயில்கள்) எந்த பாதையிலும் ரயில்வே போர்டின் முன் அனுமதி இல்லாமல் இயக்க முடியாது. இந்த உத்தரவின்படி, ரயில் செல்லும் வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் ஒப்புதலும், இறுதியில் ரயில் நிற்கும் நிலையத்தின் ஒப்புதலும் கட்டாயம் பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் எந்த சிறப்பு ரயிலும் ஓட அனுமதி இல்லை.
ரயில்வே போர்டின் கோச்சிங்-1 பிரிவு நிர்வாக இயக்குநர் நீரஜ் குமார் மவுரியா இதுகுறித்து கூறுகையில், ‘பல இடங்களில் அனுமதி இல்லாமலேயே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால் தொடக்க நிலையங்களில் ரயில்கள் தாமதமாகின. பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதை தவிர்க்க, இனி அனைத்து மண்டல ரயில்வேக்களும் விதிகளை மிக கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். எந்த சிறப்பு ரயிலையும் இயக்குவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம்’ என்றார். முன்பு சில மண்டல ரயில்வேக்கள் பண்டிகை, விடுமுறை, தேர்வு காலம் போன்றவற்றில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் போது விரைவாக ரயில் ஓட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வழி நிலையங்கள் மற்றும் இறுதி நிலையத்தின் முழு ஒப்புதல் பெறாமலேயே சிறப்பு ரயில்களை இயக்கின. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. ரயில்கள் தாமதமாகின, பாதை குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த குழப்பங்களை தடுக்கஇந்த கண்டிப்பான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திடீரென பயணிகள் கூட்டம் அதிகரித்தால், மிக அவசர சூழலில் மட்டும் அன்ரிசர்வ்டு (முன்பதிவு இல்லாத) ரயில்களை தொலைபேசி மூலம் அனுமதி பெற்று இயக்கலாம். ஆனால் ரிசர்வ்டு (முன்பதிவு செய்யப்பட்ட) சிறப்பு ரயில்களை ஒருபோதும் என்ஒசி இல்லாமல் இயக்க அனுமதி இல்லை. தற்போது உள்ள அனைத்து டீஒடி அனுமதிகளும் பிப்ரவரி 28, 2026 அன்று தானாகவே காலாவதியாகிவிடும். மார்ச் 1, 2026 முதல் புதிய அனுமதி பெற வேண்டும். கோரிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஹோலி சிறப்பு ரயில்கள் மார்ச் 2026ல், கோடை சிறப்பு ரயில்கள் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரை, ஆயுத பூஜை / கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி சிறப்பு ரயில்கள் அக்டோபர் – நவம்பர் காலத்தில், குளிர்கால சிறப்பு ரயில்கள் டிசம்பர் 15 முதல் ஜனவரி 10 வரை இயக்கப்படும். மற்ற காலங்களில் திடீர் கூட்டத்துக்கான எக்ஸ்ட்ரா ரஷ் ரயில்களும் இயக்கப்படும். இந்த புதிய விதிகள் மூலம் சிறப்பு ரயில்கள் திட்டமிட்டு, ஒழுங்காக இயக்கப்படும்.
