சென்னை: ஜனவரி 5ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தவும், தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியை அனைவருக்கும் எளிதாகக் கொண்டு செல்லவும், கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மொத்தம் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மடிக்கணினிகள் வழங்கப்படுவதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள், கல்வி சார்ந்த ஆய்வுகள், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்றவற்றில் மாணவர்கள் சிறப்பாக ஈடுபட முடியும். மேலும், தொழில்நுட்ப அறிவு சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இந்தத திட்டம் துணை நிற்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்தை உறுதி செய்யும் வகையில் மடிக்கணினி வழங்கும் திட்டம் வெளிப்படுத்துகிறது.
