திருவெறும்பூர்: திருச்சி அருகே மகள் முடிக்கு கலரிங் செய்து வந்ததால் அதிமுக பெண் நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி நவல்பட்டு பர்மாகாலனியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி ஜெயந்தி(36). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதிமுகவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக இருந்த ஜெயந்தி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை, ஜெயந்தி மூத்த மகள் ஷாலினியுடன் (18) இருந்தார்.
அப்போது இளைய மகள் கிருஷ்மிளா (17), தலை முடிக்கு கலரிங் செய்து வந்துள்ளார். இதனை பார்த்த ஜெயந்தி, அவரை கண்டித்தார். இதில் கோபமடைந்த கிருஷ்மிளா, வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை தள்ளி விட்டு உடைத்தாராம். இதனால் மனமுடைந்த ஜெயந்தி, அறை கதவை உள்பக்கமாக சாத்திக்கொண்டு மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக்கொண்டார். அதிர்ச்சியடைந்த மகள்கள் இருவரும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் ஜெயந்தி இறந்தார். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
