சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரைக்கு செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இந்திய ரயில்வேயில் புதிய ரயில் நேர அட்டவணை அமலுக்கு வருகிறது. பல ரயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் சீக்கிரம் சென்றடையும். இந்த புதிய அட்டவணையில் பல மாற்றங்கள் உள்ளன. 12 ஜோடி புதிய ரயில்கள் தொடங்கப்படும். 4 ஜோடி ரயில்களின் பாதை நீட்டிக்கப்படும். 2 ரயில்களின் இறுதி நிலையம் மாற்றப்படும். 2 ஜோடி ரயில்களின் இயக்க எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 12 ரயில்களின் எண்கள் மாற்றப்படும். 164 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் சேர்க்கப்படும். இதில் 61 ரயில்களுக்கு ஜனவரி 1 முதலே புதிய நிறுத்தங்கள் தொடங்கும்.
பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 89 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 66 ரயில்களில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மாற்றம் இருக்கும். 2 ரயில்கள் மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் இருந்து சூப்பர் பாஸ்ட் ஆக மாற்றப்பட்டுள்ளன. சுமார் 34,428 கிலோமீட்டர் புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில்கள் வேகமாக ஓட முடியும். புதிய வேகத்துக்கு ஏற்ப நேரங்களை சரிசெய்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தென் மாவட்ட பயணிகளுக்கு ரயில் டிக்கெட் விலை ஏற்றத்துக்கு மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி இல்லையென்றாலும், கொஞ்சம் நிம்மதி அடையும் வகையில் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் அதிகம். இவர்களுக்காக சில முக்கிய ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
நெல்லை விரைவு ரயில் வண்டி எண் 12632 நெல்லையில் இருந்து எழும்பூருக்கு தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்படும். இனி ஜனவரி 1 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.50 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரை மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்றடையும். பொதிகை விரைவு ரயில் வண்டி எண் 12662 செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்படும். இனி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55 மணிக்கே எழும்பூரை சென்றடையும். இதனால் சுமார் 15 நிமிடங்கள் சீக்கிரம் வந்துவிடும்.
முத்துநகர் விரைவு ரயில் தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்படும். இனி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு எழும்பூரை சென்றடையும். கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் வண்டி எண் 16102 செங்கோட்டையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் இந்த ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடைந்தது. இனி ஜனவரி 1 முதல் காலை 6.05 மணிக்கே தாம்பரத்தை சென்றடையும். அதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூர் செல்லும் சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் – சென்னை இடையே இயக்கப்படும் ரயில்களில், காரைக்குடி மற்றும் திருச்சி வழியாகச் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22662) பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், திருச்சி – ராமேஸ்வரம் இடையிலான ரயில் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு, ரயிலின் வேகம் மணிக்கு 110 கி.மீ-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் டீசல் இன்ஜின் மாற்றுவதற்காக ஆகும் அரை மணி நேர தாமதமும் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பயண நேரத்தை 20 நிமிடங்கள் குறைத்து புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக இரவு 8.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, இனி இரவு 9.10 மணிக்கு புறப்படும். ராமநாதபுரம்: இரவு 10 மணி. பரமக்குடி இரவு 10.30 மணி. மானாமதுரை இரவு 10.50 மணி. காரைக்குடி இரவு 11.55 மணி. திருச்சி அதிகாலை 1.35 மணி. இந்த ரயில் சென்னைக்கு, வழக்கமான நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது காலை 7.20 மணிக்கு சென்றடையும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த நேர மாற்றத்தை கவனித்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை – கோவை, சென்னை – மதுரை – கன்னியாகுமரி உள்பட பல்வேறு வழித்தடங்களில், தற்போதுள்ளதை காட்டிலும், 40 நிமிடங்கள் வரை பயண நேரத்தை சேமிக்க முடியும். தென் மாவட்ட பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள். புதிய நேர அட்டவணையை ரயில்வே இணையதளம் அல்லது NTES செயலியில் சரிபார்த்து பயணம் செய்யுங்கள். இந்த மாற்றங்கள் மூலம் ரயில் பயணம் இன்னும் வேகமாகவும் வசதியாகவும் மாறும். பயணம் சந்தோஷமாக இருக்கட்டும்.
* முத்துநகர் விரைவு ரயில் தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்படும். இனி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு எழும்பூரை சென்றடையும்.
* கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் (எண் 16102) செங்கோட்டையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சென்னை – கோவை, சென்னை – மதுரை – கன்னியாகுமரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் தற்போதுள்ளதை காட்டிலும் 40 நிமிடங்கள் வரை பயண நேரம் சேமிக்க முடியும்.
