செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலில் மூதாட்டியின் நகை பறிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பேருந்துக்குள் முண்டியடித்து ஏறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு மூதாட்டியின் மூன்றரை சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மனைவி செல்வமணி (70). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுதொடர்பாக செல்வமணியை மாதந்தோறும் செங்கல்பட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக செல்வமணியின் தம்பி மகள் உள்பட 3 பேர் அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம் போல் செல்வமணியை உறவினர்கள் பேருந்து மூலமாக செங்கல்பட்டுக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்ததும், நேற்று மாலை உத்திரமேரூர் திரும்புவதற்காக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வமணியுடன் 3 உறவினர்கள் வந்துள்ளனர். அங்கு உத்திரமேரூர் செல்லும் பேருந்து நீண்ட காலதாமதமாக வந்ததால், அப்பேருந்தில் சீட் பிடிப்பதற்காக பலர் முண்டியடித்து ஏறியுள்ளனர்.

அதேபோல் செல்வமணியுடன் 3 உறவினர்களும் ஏறியுள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மூதாட்டி செல்வமணியின் கழுத்தில் கிடந்த மூன்றரை சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். மேலும், இதேபோல் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒருவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் பிக்பாக்கெட் அடித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் செல்வமணி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலில் மூதாட்டியின் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: