ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!

டெல்லி: முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட 20 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தினை 100 ரயில் நிலையங்களுக்கு IRCTC விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரயில்கள் அனைத்திலும் IRCTC உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனால் உணவுகளின் விலை அதிகம் என்பதால் ஏழை பயணிகளுக்கு எட்டாமல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகளில் பயணிப்போருக்கு பயனளிக்கும் வகையில், 20 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தினை சோதனை முறையில் IRCTC சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது.

20 ரூபாய்க்கு 7 பூரிகளுடன் உருளை கிழங்கு மசாலா மற்றும் ஊறுகாய் தரப்பட்டதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் மலிவு விலை உணவினை 100 ரயில் நிலையங்களுக்கு IRCTC தற்போது விரிவுபடுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகள் நிற்கும் நடைமேடைகளில் 150 கவுண்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஹைதராபாத், விஜயவாடா, ரேணிகுண்டா, குண்டக்கல், திருப்பதி, ராஜமுந்திரி, அவுரங்காபாத், நந்தியாலா, மும்பை, பாந்த்ரா உள்ளிட்ட 100 ரயில் நிலையங்களில் உணவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த IRCTC திட்டமிட்டுள்ளது. அதேபோல மதிய உணவாக IRCTC கவுண்டர்களின் 50 ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளும் கிடைக்கும் என்று IRCTC தெரிவித்துள்ளது.

The post ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: