மக்களவை தேர்தல்: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல்.! 13ம் தேதி வாகன பேரணியும் நடத்துகிறார்

வாரணாசி: பிரதமர் மோடி, தொடர்ந்து 3வது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய நாள் 13ம் தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார். பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டது. பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக வாரணாசி நகர பாஜக தலைவர் வித்யாசாகர் ராய் தெரிவித்தார். வாரணாசி தொகுதியானது 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. 1967-ல் சிபிஎம் கட்சி வென்றது. 1971-ல் காங்கிரஸ், 1977-ல் ஜனதா கட்சி, 1980, 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதன்பின்னர் 1989 தேர்தலில் ஜனதா தளமும், 1991 முதல் 1999-ம் ஆண்டு வரையிலான 4 தேர்தல்களில் பா.ஜ.க தொடர்ச்சியாகவும் வென்ற தொகுதி இது. 2004ம் ஆண்டு காங்கிரசின் ராஜேஷ் குமார் மிஸ்ரா இத்தொகுதியில் வென்றார். 2009ம் ஆண்டு பா.ஜ.க.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார். 2014ல் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்று நாட்டின் பிரதமரானார். 2019ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமரானார். தற்போது 3வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல்: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல்.! 13ம் தேதி வாகன பேரணியும் நடத்துகிறார் appeared first on Dinakaran.

Related Stories: