பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளிக் குழந்தைகளை கடத்திய ஹீரோவும், அவரது நண்பரும் பணக்காரர்கள் ஆனார்களா என்பதை மையப்படுத்தி உருவாகும் முழுநீள நகைச்சுவைப் படம், ‘வா வரலாம் வா’. இதை எல்.ஜி.ரவிசந்தர், எஸ்.பி.ஆர் இணைந்து இயக்குகின்றனர். எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிக்கிறார். இதற்கு முன்பு ‘மாசாணி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’, ‘நான் அவளை சந்தித்தபோது’ ஆகிய படங்களை எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ளார்.
‘வா வரலாம் வா’ படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சிங்கம்புலி, தீபா, சரவண சுப்பையா, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, பிரபாகரன், ராமசாமி, மீசை ராஜேந்திரநாத், வடிவேலு பீட்டர் நடிக்கின்றனர். கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைக்கிறார். காதல்மதி, கானா எட்வின் பாடல்கள் எழுதுகின்றனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், வேடவாக்கம், வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
