கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்: ஆடிப் பாடி மகிழ்ந்தனர்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் சித்திரை பெருவிழா மாரியம்மன் கோயில் அருகில் கடந்த 9ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23ம் தேதியான நேற்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு கோயில் அருகில் கற்பூரம் ஏற்றி அரவானின் பெருமைகளை கூறி கும்மி அடித்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

24ம் தேதியான இன்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தேர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பந்தலடிக்கு செல்லும். அங்கு அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப் பாடி மகிழ்ச்சியோடு இருந்த திருநங்கைகள் அரவான் களப்பலிக்குப் பிறகு பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து தலைமுழுகி வெள்ளை புடவை உடுத்தி வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து அழுது சோகமாக வீடு திரும்புவார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

The post கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்: ஆடிப் பாடி மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: