வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48 தீயணைப்பு படை வீரர்கள் 2 ஷிப்டு முறையில் பாதுகாப்பு

 

ஈரோடு,ஏப்.16: ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் இவிஎம் இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படும் அறைக்கு 48 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அன்றைய தினம் இரவே இவிஎம் இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மண்டல அலுவலர் முன்னிலையில் பெட்டியில் வைத்து சீலிட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு அருகே உள்ள ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பெட்டிகளை ஆய்வு செய்து, இவிஎம் இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை ‘ஸ்டராங் ரூம்’(பாதுகாப்பு அறை) வைத்து, கதவை பூட்டி சீல் வைக்கப்படும்.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதனை சுற்றி துணை ராணுவ வீரர்கள், குஜராத் மாநில போலீசார், பட்டாலியன் போலீசாரை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதனை சுற்றி தீ போன்ற மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க வாக்கு எண்ணிக்கை மையத்தின் வாளகத்திலேயே ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 48 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் மாதம் 4ம் தேதி வரை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருப்பர். இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர்(டிஎப்ஓ) அம்பிகா கூறியதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையமும், வாக்கு எண்ணிக்கை மையமுமான சித்தோடு ஐஆர்டிடி கல்லுாரியில் வாக்குப்பதிவு நாளான 19ம் தேதி முதல் ஜூன் மாதம் 4 இரவு வரை தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தின் வாளகத்திலேயே ஒரு தீயணைப்பு வாகனம் நிலையாக நிறுத்தி வைக்கப்படும். தீயணைப்பு வாகனத்தில் ஒரு ஷிப்டுக்கு 7 தீயணைப்பு வீரர்கள் என தினமும் 2 ஷிப்டுக்கு தீயணைப்பு வீரர்கள் வருவர். அதுபோல் மொத்தமுள்ள 6 சட்டமன்ற தொகுதியில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு தலா 2 தீயணைப்பு வீரர்கள் என ஒரு ஷிப்டுக்கு 12 தீயணைப்பு வீரர்கள் இருப்பர். இரண்டு ஷிப்டுக்கு 24 தீயணைப்பு வீரர்கள் இருப்பர். தினமும் 48 தீயணைப்பு வீரர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தீ தடுப்பு பணிக்கு தயாராக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

The post வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48 தீயணைப்பு படை வீரர்கள் 2 ஷிப்டு முறையில் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: