முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மீது கல்வீச்சு

திருமலை: ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சந்திரபாபு, பவன் கல்யாண் மீது கல்வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் விஜயவாடாவில் நேற்று முன்தினம் பேருந்து யாத்திரை மேற்கொண்டார். அப்போது, அவர் மீது கல் வீசப்பட்டது. இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டதோடு, முன்னாள் அமைச்சரும் விஜயவாடா தொகுதி வேட்பாளர் பெல்லம்பள்ளி நிவாஸ் கண்ணிலும் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாகாவில் நேற்றிரவு ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, வாகனத்தின் பின்புறத்தில் இருந்து மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல் எறிந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து சந்திரபாபு நிருபர்களிடையே கூறுகையில், ‘ என் மீது கற்களை வீச முயன்றுள்ளனர். இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயன்படும் ஆள் நான் இல்லை. என்னுடைய பயணம் தொடரும்’ என்றார்.
இதற்கிடையே, குண்டூரில் ரோட் ஷோ மேற்கொண்ட போது நடிகர் பவன் கல்யாண் மீது கல் வீசப்பட்டது.

குண்டூர் மாவட்டம் தெனாலியில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வாராகி விஜய பேரி கூட்டம் நேற்று நடந்தது. இதற்காக வேனில் இருந்தபடி ரோடு ஷோ மேற்கொண்டு பொது கூட்டம் நடக்க இருந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்த பவன் கல்யாண் மீது கல்வீசப்பட்டது. ஆனால் அந்த கல் பவன் கல்யாண் மீது படாமல் வெகுதூரம் சென்று விழுந்தது. கல் வீசிய நபரை ஜனசேனா கட்சி நிர்வாகிகள் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

The post முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: