2ம் கட்டமாக சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

 

ஈரோடு, ஏப்.10: வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை 2வது கட்டமாக கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் உள்ள, 2,222 வாக்குச்சாவடிகள் மற்றும் கூடுதலாக 20 சதவீத வாக்குச்சாவடிகள் என 2,530 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் ஆகியவை தேர்தல் ஆணைய இணைய தளம் மூலமாக கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட குமாரபாளையம் தொகுதியில் 279 வாக்குச்சாவடிகளுக்கு 668 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 334 கட்டுப்பாட்டு கருவிகள், 362 வி.வி.பேட்கள், ஈரோடு கிழக்கு தொகுயில் 237 வாக்குச்சாவடிகளுக்கு 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு கருவிகள், 308 வி.வி.பேட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, ஈரோடு மேற்கில் 302 வாக்குச்சாவடிகளுக்கு 724 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 362 கட்டுப்பாட்டு கருவிகள், 392 வி.வி.பேட்கள், மொடக்குறிச்சியில் 277 வாக்குச்சாவடிகளுக்கு 664 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 332 கட்டுப்பாட்டு கருவிகள், 360 வி.வி.பேட்கள், தாராபுரத்தில் 298 வாக்குச்சாவடிகளுக்கு 720 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 360 கட்டுப்பாட்டு கருவிகள், 390 வி.வி.பேட்கள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

காங்கயம் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகளுக்கு 712 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 356 கட்டுப்பாட்டு கருவிகள், 386 வி.வி.பேட்கள் என 6 தொகுதிகளுக்கும் சேர்த்து, 1,688 வாக்குச்சாவடிகளுக்கு 4,056 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,028 கட்டுப்பாட்டு கருவிகள் 2,198 வி.வி.பேட்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதையடுத்து, அந்தந்த தொகுதியில், எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட்கள் அனுப்பப்பட வேண்டும் என நேற்று 2வது கட்டமாக கணினி மூலமாக சுழற்சி செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், 680 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 340 கட்டுப்பாட்டு கருவிகள், 510 வி.வி.பேட் ஆகியவை இருப்பில் உள்ளன. இப்பணியில் பயிற்சி உதவி கலெக்டர் வினய்குமார் மீனா, தேர்தல் அதிகாரிகள் ரகுநாதன், சிவசங்கர், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 2ம் கட்டமாக சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: