கருங்கலில் தொழிலாளி கொல்லப்பட்டது எப்படி?

*கண்காணிப்பு கேமராவால் சிக்கிய வாலிபர்

கருங்கல் : கருங்கல் பஸ் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன் கருங்கல் பரமானந்தபுரம் பகுதியை சேர்ந்த மெர்லின் ஸ்டான்லி (44) என்பவர் முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் சாமியார்மடம் தெற்கை பகுதியை சேர்ந்த டென்னிஸ் என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டென்னிசுக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மெர்லின் ஸ்டான்லி, டென்னிஸ் மற்றும் மீனவர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு வாலிபர் என்று 3 பேரும் வீதிகளில் கிடக்கும் மதுபாடில்களை சேகரித்து, டாஸ்மாக் கடையில் கொடுத்து மது அருந்துவது வழக்கம்.

கடந்த 12ம் தேதி நள்ளிரவு சுமார் 11 மணியளவில் மது பாட்டில் சேகரித்ததில் மெர்லின் ஸ்டான்லிக்கும், மற்ற 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த 3 பேரும் கருங்கல் பஸ் நிலையத்தில் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்துள்ளனர். இதையடுத்து மீனவர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் சென்றுவிட்டார்.

மெர்லின் ஸ்டான்லியும், டென்னிசும் போதையில் தள்ளாடிக்கொண்டிருந்ததால் பஸ் நிலையத்திலேயே அருகருகே தூங்கியுள்ளனர். அதிகாலையில் டென்னிஸ் எழுந்து பார்த்தபோது அருகே படுத்திருந்த மெர்லின் ஸ்டான்லியை கண்டதும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அருகில் கிடந்த கல்லை எடுத்து மெர்லின் ஸ்டான்லியின் முகத்தில் தாக்கியுள்ளார். போதையில் இருந்ததாலும், தூக்கத்தில் இருந்ததாலும் மெர்லின் ஸ்டான்லியால் டென்னிசை தடுக்க முடியவில்லை.

இதையடுத்து டென்னிஸ் அங்கிருந்து சென்றுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து ரத்தம் படிந்த கல்லை போலீசார் மீட்டுள்ளனர். கருங்கல் பஸ்நிலையத்தில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை. வேறொரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் சோதனை செய்தபோதுதான் மெர்லின் ஸ்டான்லி உள்பட 3 பேர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் விசாரித்ததால் டென்னிஸ் சிக்கினார்.

The post கருங்கலில் தொழிலாளி கொல்லப்பட்டது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: