நாகப்பட்டினம் மாவட்டம் வளர்ச்சி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

*அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் கலெக்டர் வேண்டுகோள்

நாகப்பட்டினம் : தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடந்தது.செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். புகைப்பட கண்காட்சியை கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் தமிழ்நாடு அரசின் சாதனை அடங்கிய புகைப்படங்களை பார்வையிட்டனர். அப்போது கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் பேசியதாவது:

முதல்வர் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மீன்வளம், மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, பள்ளி கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளில் ரூ.90.61 கோடியில் 36 கட்டிடங்கள் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பிரிவு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் ரூ.2.90 கோடியில் புதிய ஆர்டிஓ அலுவலகம், ஒரத்தூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.126.57 கோடி மதிப்பீட்டில் மருத்துவ சேவைகள் கட்டிடம் திறக்கப்படவுள்ளது. வருவாய்த்துறை. பொதுப்பணித்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பள்ளி கல்வித்துறை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளுக்கான ரூ.86.05 கோடி மதிப்பீட்டில் 33 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.2 கோடியே 58 லட்சம் மதிப்பில் நாகப்பட்டினத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டடம் கட்டும் பணிகள் மிக விரைவில் துவங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மாவட்டத்தில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஒரு நாளைக்கு 15 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.42.46 கோடியில் 2 குடிநீர் சேகரிக்கும் கிணறுகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2023 -24ம் ஆண்டு சிறப்பு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.1752 கோடியில் 980 ஊரக குடியிருப்புகள், 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளிலுள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு தினந்தோறும் ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.82.98 கோடியில் 70 ஆயிரத்து 89 தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு மற்றும் ₹2 கோடியே 81 லட்சம் மதிப்பில் 21 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கீழ்வேளுரில் ரூ.10 கோடியில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாய நிலங்களின் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் 2 ஆயிரத்து 66 விவசாயிகளுக்கு ரூ.66.42 கோடியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.ரூ.55 லட்சம் மதிப்பில் 7 ஆயிரத்து 60 விவசாயிகளுக்கு உளுந்து மற்றும் பச்சைப்பயிறு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

₹5.50 கோடியில் மொத்தம் 462 கிலோ மீட்டர் நீளமுள்ள தூர்வாரும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 17 ஆயிரத்து 350 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைக் காப்பதற்காக 15 ஆயிரத்து 400 விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 3 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக திறந்துவிடப்பட்டுள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் நம்பியார் நகரில் ரூ.10 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம், வெள்ளப்பள்ளத்தில் ₹100 கோடியில் மீன்பிடி துறைமுகம் ஆகிய பணிகள் நடநத வருகின்றது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் துறைமுக விரிவாக்க பணிகள் மற்றும் படகுகள் நிறுத்துமிடம் ஆகிய பணிகள் ரூ.81 கோடியில் நடந்து வருகிறது. நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் நாகூர் பட்டினச்சேரியில் ரூ.7 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டத்தில் ரூ.5 கோடியில் நாகூர் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டுதல் மற்றும் ரூ.32 லட்சம் மதிப்பில் நாகப்பட்டினம் நகராட்சியில் கிறிஸ்துவர்களுக்கான கல்லறை தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகியபணிகள் மிக விரைவில் துவங்கப்பட உள்ளன.

இது போல் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்டத்தில் நிறைவுபெற்றுள்ளது. சில பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தை வளர்ச்சி பெற செய்வதில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார். கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, டிஆர்ஓ பேபி, எஸ்பி ஹர்ஷ்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

The post நாகப்பட்டினம் மாவட்டம் வளர்ச்சி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: