யாரையோ திருப்திப்படுத்த வரலாற்றை திரித்து பேசுகிறார்: கவர்னருக்கு வைகுண்டர் தலைமைபதி கண்டனம்

சென்னை: ‘யாரையோ திருப்திப்படுத்த வரலாற்றை திரித்து பேசுகிறார்’ என்று அய்யா வைகுண்டர் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் அய்யா வைகுண்டர் 192வது அவதார தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதானத்தை காக்க தோன்றியவர் அய்யா வைகுண்டர் என்று பேசியிருந்தார். இந்த கருத்துக்கு வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசி உள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். அவர் சமத்துவத்தை எடுத்துரைத்தவர். அவரையும் யாரும் சனாதனத்திற்குள் கொண்டு வர முடியாது. குமரிக்கண்டம் மூழ்கி இமயமலை உருவாகியது. இவர்கள் இமயமலையை முன்னிலைபடுத்தி கூறுகின்றனர். வைகுண்டர் கூறிய தென் கடலை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினால் அதனை ஏற்று கொள்வோம்.

அதை விட்டு விட்டு வடநாட்டில் இருப்பதை இவர்கள் கூறினால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜாதியை வகுத்தவனை நீசன் என்று கூறுகிறார் அய்யா வைகுண்டர். அப்படிபட்ட இடத்தில் சனாதனத்தை ஆதரித்தவர் அய்யா வைகுண்டர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் மக்களாக அய்யா வழி மக்கள் இருக்கிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவி, வரலாற்றை தெரியாமல் பேசவில்லை. யாரையோ திருப்திப்படுத்த, சுய லாபத்துக்காக வரலாற்றை திரித்து பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆளுநர் கடந்த சில மாதங்களாவே தேர்தல் நெருங்குவதால், தமிழகத்துக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு என்று கூறக்கூடாது. தமிழகம் என்றுதான் கூற வேண்டும் என்றார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். அதேபோல, தமிழ்மொழிக்கெல்லாம் முன்னோடியாக சமஸ்கிருதம் உள்ளது என்று தெரிவித்து, சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடித்துப் பேசினார். இதற்கும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதேபோல, நீட்டுக்கு ஆதரவாக பேசினார். அவர் நடத்திய கூட்டத்துக்கு வந்த மாணவியின் தந்தை எதிர்த்துப் பேசியது சர்ச்சையானது. சட்டப்பேரவையில், பேரவை கூடியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படும். முடியும்போதுதான் தேசிய கீதம் பாடப்படும்.

ஆனால் பேரவையின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு, தேசியகீதம், கடைசியில் பாடப்படும். அதுவரை இருந்து கேட்டுச் செல்லுங்கள் என்றார். ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார். இவ்வாறு கடந்த சில மாதங்களாகவே வரலாற்றை திரித்துப் பேச வேண்டும் என்று செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் அவருக்கே பாதிப்பாக முடிந்து வருகிறது. ஆனாலும் அவர் தொடர்ந்து அதே தவற்றை செய்து வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில்தான் அய்யா வைகுண்டரின் கருத்துக்களை மாறி கூறியதாக தற்போதும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஜி.யு.போப், கால்டுவெல் குறித்த கருத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்; தமிழ்நாடு கிறிஸ்தவ முன்னணி இயக்கம் அறிவிப்பு
தமிழ்நாடு கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன் நெல்லை நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு வந்து கல்வி மற்றும் சமூகப் பணி செய்த தமிழறிஞர்கள் டாக்டர் ஜி.யு.போப் மற்றும் பிஷப் கால்டுவெல் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி பேசும்போது, இவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும், மதத்தை பரப்புவதற்காக இங்கு வந்ததாகவும், திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும் கூறியுள்ளார். இது ஒரு ஆளுநருக்கு தகுதியல்ல. ஒரு மதவிழாவில் பேசும்போது மற்ற மதத்தை குறித்து தவறாக ஒரு கவர்னர் பேசியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இதற்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும். அமைதியாக உள்ள தமிழகத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஆளுநர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இதற்கு உடனடியாக அவர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

The post யாரையோ திருப்திப்படுத்த வரலாற்றை திரித்து பேசுகிறார்: கவர்னருக்கு வைகுண்டர் தலைமைபதி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: