பிளஸ் 2 தேர்வு தொடங்கியது:  கலெக்டர் ஆய்வு  270 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர், மார்ச் 2: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 தமிழ் தேர்வில், தமிழ், 270 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தேர்வு மையத்தை கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில், 2023 – 24ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்று தொடங்கியது. திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், 105 மையங்களில், 25,882 பேர் தேர்வு எழுத, அனுமதிக்கப்பட்டனர். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள், 5 மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு, 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதும் பள்ளிகளுக்கு நேரில் சென்று திடீர் சோதனை நடத்தி மாணவர்கள் பிட் அடிப்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்த நிலையில், 105 தேர்வு மையங்களில் முதல் நாள் தமிழ் தேர்வினை 25890 மாணவர்களில் 25610 மாணவர்கள் தேர்வு எழுதினர். 270 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளாமல் ஆப்சன்ட் ஆகியுள்ளனர். மேலும் 10 மாணவர்கள் மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள, 25 ஆயிரத்து 612 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு எழுதிய மாணவர்கள், தமிழ் தேர்வு எளிதாக இருப்பதாக தெரிவித்தனர்.

பொன்னேரியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 25.890 மாணவர்களில் 25.610 மாணவர்கள் 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர். 270 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மேலும் 10 மாணவர்களுக்கு மொழிப்பாடத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 146 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் மூலம் மொழிப்பாட தேர்வினை எழுதினர். தனித்தேர்வர்களை பொறுத்த வரையில் 11 தேர்வு மையங்களில் 591 தேர்வர்களில் 540 பேர் மொழித் தேர்வினை எழுதினர். இவர்களில் 51 தனித் தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
மணவாளநகர், கேஇஎன்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி என்.டிலோசனா: பிளஸ் 2 தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. நான் படித்த வினாக்கள் தேர்வில் வந்ததால், மிக உற்சாகமாக எழுதினேன். மாற்றுத்திறனாளியான நான், இந்த தேர்வில் வெற்றி பெற்று, அரசுப்பணியில் சேர்ந்து, எனது பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேன்.

மணவாளநகர், கேஇஎன்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.ஜனத்துள் அப்ரின்: கூலித் தொழிலாளியான எனது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஐஏஎஸ் படிப்பதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம். தமிழ் தேர்வு மிக எளிதாக இருந்தது. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், நன்றாக படித்து டாக்டராக விருப்பம். தினகரன் நாளிதழில் வெளிவந்த மாதிரி வினா, விடையை படித்தேன். அதுவும் இந்த தேர்வு எளிமையாக இருப்பதற்கு உறுதுணையாக இருந்தது. பள்ளி ஆசிரியர்கள் நன்றாக கல்வி கற்பித்தனர். இந்த தேர்வில் வெற்றி பெற்று, எனது பெற்றோர் கனவை நிறைவேற்றுவேன்.

ராள்ளபாடி, தனியார் பள்ளி மாணவன் சாய்கிரண்: நான் பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி தனியார் பள்ளியில் படித்து வருகிறேன். இந்த முறை நேற்று நான் எழுதிய தேர்வு மிகவும் சுலபமாக இருந்தது. தமிழில் அதிக மதிப்பெண் எடுப்பேன் என்றான். மேலும் அரசு பள்ளி மாணவர்களும் தமிழில் அதிக மதிப்பெண் எடுப்பதாக கூறினர்.

The post பிளஸ் 2 தேர்வு தொடங்கியது:  கலெக்டர் ஆய்வு  270 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: