திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை அடித்துக்கொன்ற சிங்கம்

திருமலை: திருப்பதி உயிரியியல் பூங்கா வளாகத்திற்குள் குதித்து செல்பி எடுக்க சென்ற ராஜஸ்தான் வாலிபரை சிங்கம் அடித்துக் கொன்றது. இதனால் மிருகக்காட்சி சாலைக்குள் பார்வையாளர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. திருப்பதி அலிபிரி சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் சுந்தரி, குமார், தொங்கல்பூர் என்ற பெயர்களில் 2 ஆண் சிங்கங்களும். ஒரு பெண் சிங்கமும் உள்ளன.

இங்கு ஒவ்வொரு நாளும், பார்வையாளர்களுக்காக சிங்கங்கள் பாதுகாப்பு கூண்டிலிருந்து காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை அதன் வளாகத்திற்குள் சுற்றி வர திறந்து வைக்கப்படும். இந்நிலையில் நேற்று மதியம் ஒரு பார்வையாளராக வந்த வாலிபர் ஒருவர் தொங்கல்பூர் ஆண் சிங்கம் இருந்த வளாகத்திற்குள் குதித்து செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சிங்கம் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. இதை பார்த்த வாலிபர் செல்போனை போட்டுவிட்டு அங்கிருந்த மரத்தில் ஏறி தப்பிக்க முயன்றார்.

ஆனால் அதற்குள் அந்த சிங்கம் பாய்ந்து அவரை கவ்வியது. பின்னர் அவரை கடித்து குதறி கொன்றது. இதைப்பார்த்ததும் மற்ற பார்வையாளர்கள் பதறியபடி கூச்சலிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உயிரியியல் பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையாளர்கள் அனைவரையும் உடனடியாக வெளியே அனுப்பி சிங்கத்தை கூண்டில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் இறந்தவர் பூங்கா பதிவின்படி இந்தியில் பேசியபடி சென்ற அந்த வாலிபர் ராஜஸ்தானை சேர்ந்த குர்ஜலா பிரஹலாதா என்று தெரியவந்தது.

The post திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை அடித்துக்கொன்ற சிங்கம் appeared first on Dinakaran.

Related Stories: