அருகில் புதிய கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டியதால் 3 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது

திருமலை: ஆந்திராவில் வேறு கட்டிடத்துக்கு அருகில் பள்ளம் தோண்டியதால் 3 மாடிகள் கொண்ட லாட்ஜ் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. முன்னதாக அனைவரும் அலறியடித்து வெளியேறி உயிர் தப்பினர். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், பெத்த டோர்னாவில் உள்ள ஸ்ரீ சைலம் சாலையில் மூன்று அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடத்தில் தனியார் லாட்ஜ் இயங்கி வந்தது. இதில், எப்போதும் வாடிக்கையாளர்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், லாட்ஜின் அருகில் உள்ள பக்கத்து இடத்தில் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு அஸ்திவாரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இதன் காரணமாக லாட்ஜ் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட தொடங்கி, கட்டிடம் முழுவதும் பரவியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், நேற்று முன்தினம் இரவு அதில் தங்கி இருந்த வாடிக்கையாளர்களை வெளியேறும்படி கூறினார்.

உடனடியாக அனைவரும் அலறியடித்து வெளியேறினர்.அதன்பின்னர் சிறிது நேரத்தில் வாடிக்கையாளர்கள் கண்முன்னே மூன்று மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. பலத்த சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பெருமளவில் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாட்ஜ் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததை அங்கிருந்தவர்கள் தங்களதுசெல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது வீடியோ கட்சிகள் வைரலாகி வருகிறது.

 

The post அருகில் புதிய கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டியதால் 3 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது appeared first on Dinakaran.

Related Stories: