ஒரே கட்டமாக நடக்கிறது: தமிழகத்தில் ஏப்.23ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

* புதுச்சேரி, கேரளம், அசாமில் ஏப்.9ல் ஒரே கட்ட தேர்தல்
* மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 என இரண்டு கட்டமாக நடக்கிறது
* மே 4ல் வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. புதுச்சேரி, கேரளம், அசாமில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதே போல, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இதையொட்டி, தமிழ்நாடு உட்பட தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும், குஜராத், உபி, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் என 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 21 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. 77 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு விண்ணப்பங்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதே போல, அசாம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கத்திலும் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் பின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று வெளியிட்டார். இதில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினமே வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும். வேட்பு மனுக்களை வழங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 6ம் தேதி. வேட்பு மனு மீதான பரிசீலனை ஏப்ரல் 7ம் தேதி நடக்கும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9ம் தேதி.

இதே போல, அசாம், புதுச்சேரி, கேரளத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் இன்றே மனுதாக்கல் துவங்குகிறது. வரும் 23ம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 24ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி வரும் 26ம் தேதி ஆகும். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ம் தேதியும், 2ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் முறையற்ற சலுகைகள் ஏதுமின்றி தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், விதிமீறல்கள் ஏதேனும் நடந்தால் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எச்சரித்துள்ளார். தற்போது, 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியும், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியும், 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியும், 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா தலைமையிலான பாஜ ஆட்சியும், 33 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்.-பாஜ கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முழுக்க முழுக்க பாஜவின் வெற்றிக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களும் எஸ்ஐஆர் மூலம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

* வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? தேர்தலில் வாக்களிக்க 12 மாற்று ஆவணங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* ஆதார் அட்டை; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிக்கான பணி அட்டை; புகைப்படத்துடன் வழங்கப்பட்ட வங்கி, அஞ்சலக பாஸ்புத்தகங்கள்; தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை; ஓட்டுநர் உரிமம்; பான் அட்டை; என்பிஆர் கீழ் இந்திய பதிவுத்துறை தலைவரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை; இந்திய பாஸ்போர்ட்.

* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்; ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்; எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்; ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.

* தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்

5 மாநில சட்டப்பரேவை தேர்தலில் அதிகபட்சமாக 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தேர்ல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், 68,321 வாக்குச்சாவடிகள் இருந்தன. இப்போது அது 75,032 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* இந்த தேர்தலில் இதெல்லாம் புதுசு

வாக்குசாவடியில் வாக்காளர்கள் கொண்டு வரும் செல்போனை பாதுகாப்பாக வைக்கும் வசதி. ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் 1200 வாக்காளர்கள். தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் பாகம் எண், வாக்காளரின் பெயர் இடம் பெற்றுள்ள வரிசை எண் முதல் முறையாக கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தங்கள் பூத்களை அமைத்து வாக்காளர்களுக்கு உதவ அனுமதி. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் கலர் போட்டோ ஒட்டப்பட்டிருக்கும்.

* வாக்காளர் கவனத்திற்கு… வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதி இல்லை

5 மாநில தேர்தலின் போது, வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு போக வாக்காளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார் என்று என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

100 மீட்டர் எல்லை: வாக்குச்சாவடியைச் சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவிற்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல வேண்டுமானால், அவை கட்டாயமாக ‘சுவிட்ச் ஆஃப்’செய்யப்பட்டிருக்க வேண்டும்.

செல்போன் ஒப்படைப்பு: வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்னதாக, அங்கிருக்கும் பிரத்யேக தன்னார்வலரிடம் தனது செல்போனை (சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில்) ஒப்படைக்க வேண்டும்.

அடையாள டோக்கன்: செல்போனைப் பெற்றுக்கொண்டவுடன், அதற்கான வரிசை எண் கொண்ட டோக்கன் வாக்காளரிடம் வழங்கப்படும்.
திரும்பப் பெறுதல்: வாக்களித்து முடித்துவிட்டு வெளியே வந்ததும், அந்த டோக்கனைத் திரும்ப அளித்துவிட்டுத் தனது செல்போனைப் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டுப்பாடு: வாக்குச்சாவடியின் 100 மீட்டர் எல்லைக்கு வெளியே செல்லும் வரை போனை ஆன் செய்ய அனுமதி இல்லை.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்பு காரணங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகள் அல்லது தன்னார்வலர்கள் பற்றாக்குறை உள்ள சில குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படாமல் போகலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

* 5 வாக்காளர்களைக் கொண்ட தனித்துவமான வாக்குச்சாவடி

தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 5 மாநிலங்களில் உள்ள சில தனித்துவமான வாக்குச்சாவடிகளைப் பற்றியும், அங்கு தேர்தல் நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் கடின பணிகளையும் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

* அசாமின் மஜுலி பகுதியிலிருந்து படகு மற்றும் சாலை வழியாக சுமார் 60 கிமீ தொலைவிற்கு கடின பயணம் மேற்கொள்ளும் தேர்தல் குழுவினர், பிரம்மபுத்திரா நதியை கடந்து இறுதியாக 248 வாக்காளர்களைக் கொண்ட தொலைதூர பகுதியான தனேகானா வாக்குச்சாவடியை டிராக்டர் மூலம் சென்றடைவார்கள். கேரளாவின் பழங்குடியினப் பகுதியான இடமலக்குடியில் மொத்தம் 693 வாக்காளர்களைக் கொண்ட தனித்துவமான தொலைதூர வாக்குச்சாவடியை அடைய தேர்தல் அதிகாரிகள் கரடுமுரடான சாலைகள் இல்லாத நிலப்பரப்பு வழியாக சிறப்பு வாகனங்களில் 30 கிமீ பயணித்த பிறகு 8 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும்.

* மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் 759 வாக்காளர்களை கொண்ட புக்ஸா, 235 வாக்காளர்களை கொண்ட சுனாபட்டி, 445 வாக்காளர்களைக் கொண்ட ஆத்மா ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடியை சென்றடைய தேர்தல் குழுவினர் புக்ஸா புலிகள் சரணாலயத்தின் மலைப்பகுதிகள் வழியாக நடந்து செல்வார்கள். தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில், 5 வாக்காளர்களை மட்டுமே கொண்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியைச் சென்றடைய, தேர்தல் அதிகாரிகள் கரடுமுரடான பகுதிகள் வழியாக 3 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.

* 1885ம் ஆண்டு கட்டப்பட்ட புதுச்சேரியின் வ.உ. சிதம்பரனார் பள்ளி பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்து இயங்கி வருகிறது. இது மாதிரி வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முறையே 722 மற்றும் 651 வாக்காளர்களைக் கொண்ட 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

17.4 கோடி வாக்காளர்கள்

* 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் வாக்களிக்க 17.4 கோடி பேர் தகுதி பெற்றவர்கள் ஆவர். இது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா, ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மக்கள் தொகைக்கு இணையானது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குறிப்பிட்டார்.

* தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த 25 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிழையில்லாத வாக்காளர் பட்டியல்களே ஜனநாயகத்தின் அடித்தளமாகத் திகழ்கின்றன. எனவே வாக்களிக்கத் தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது; அதே சமயம் தகுதியற்ற எந்தவொரு நபரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக்கூடாது’’ என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எஸ்ஐஆர் பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்தியாவின் ஜனநாயக திருவிழாவான தேர்தல் பணிகளை பார்வையிட்டு அனுபவம் பெற 20 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் வர உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறி உள்ளா்.

* வாக்குப்பதிவு காலம் சுருக்கம் வாக்கு எண்ணிக்கை தாமதம்

கடந்த 2021ல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் சுமார் ஒரு மாதம் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளத்தில் ஒரே கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 8 வாக்குப்பதிவு நாட்கள் இருந்தன.

இம்முறை வாக்குப்பதிவு காலம் 20 நாட்களாக சுருக்கப்பட்டுள்ளது. வெறும் 3 வாக்குப்பதிவு நாட்கள் மட்டுமே உள்ளன. மேற்கு வங்கத்தில் இரண்டே கட்டங்களில் தேர்தல் முடிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. ஆனால் 2021 தேர்தல் உட்பட பெரும்பாலான தேர்தல்கள் வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

ஆனால் இம்முறை கடைசியாக ஏப்ரல் 29ல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 5 நாட்கள் கழித்து வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் நடைமுறையை வசதியானதாக மாற்ற வேண்டுமென பல தரப்பிலும் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் வாக்காளர்கள் நலனை கருத்தில் கொண்டே வாக்குப்பதிவு காலம் இம்முறை குறைக்கப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறிப்பிட்டார்.

* வளர்ச்சி, ஸ்திரத்தன்மைக்கு மக்கள் வாக்களிப்பார்கள்

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை வரவேற்ற பாஜ பொதுச் செயலாளர் தருண் சுக் எக்ஸ் பதிவில், ‘‘தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவாகும். இது மக்களின் பங்கேற்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், வளர்ச்சி, மக்கள் நலன், நல்லாட்சி ஆகியவற்றுக்கான புதிய பாதையையும் அமைத்து தரும் தருணமாகும். 5 மாநிலங்களின் விழிப்புணர்வு மிக்க மக்கள் ஜனநாயக மதிப்புகளை காத்து, வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லாட்சிக்கு ஆதரவாக தீர்க்கமான தீர்ப்பை வழங்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன்’’ என்றார்.

Related Stories: