ஆந்திராவின் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட பாஜகவில் `சீட்’ கேட்கும் சாமியார்

திருமலை: ஆந்திர மாநிலம், இந்துப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காக்கிநாடாவை சேர்ந்த பீடாதிபதி பரிபூராணந்த சுவாமி பாஜகவில் சீட் கேட்டுள்ளார். ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. இங்கு ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் கட்சி, நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் எந்த கட்சியும் கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியாமல் குழப்பத்தில் உள்ளன.

எனினும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் பாஜக தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து களம் காணுமா? என்பதில் அக்கட்சியினர் கடும் குழப்பத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட ஒரு சில இடங்களை தவிர பல இடங்களில் பாஜகவினர் ஆர்வம் காட்டவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் காக்கிநாடாவை சேர்ந்த பீடாதிபதி பரிபூராணந்த சுவாமி என்பவர் அரசியலில் குதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறுகையில், ‘பாஜகவில் சேர்ந்து போட்டியிட விரும்புகிறேன். அக்கட்சி தலைமை அறிவித்தால் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் இந்துப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்க தயாராக உள்ளேன். இதுகுறித்து பாஜக மேலிட தலைவர்களிடம் தொடர்பில் உள்ளேன். எனவே இந்துப்பூர் தொகுதி மக்களை சந்திக்க உள்ளேன்’ என கூறினார். மாநிலத்தில் கூட்டணி முடிவாகாத நிலையில் பாஜக சார்பில் போட்டியிட அக்கட்சியினர் பெரும்பாலானோர் தயங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சாமியார் ஒருவர் போட்டியிட விரும்புவதாக தெரிவித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திராவின் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட பாஜகவில் `சீட்’ கேட்கும் சாமியார் appeared first on Dinakaran.

Related Stories: