மாமல்லபுரம் அருகே 5 ஆண்டுகளாக திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்கு மூடி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே குழிப்பாந்தண்டலம் கிராமத்தில், 5 ஆண்டுகளாக மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு, தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று மூடி அமைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் ஊராட்சி குச்சிக்காடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்குள்ள பிள்ளையார் கோயில் தெருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையையொட்டி 250 அடி ஆழத்தில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், அதை மூடாமல் வைத்திருந்தனர். இதுபற்றி, பொதுமக்கள் பலமுறை ஊரட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், கண்டும் காணாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பிள்ளையார் கோயில் தெரு வழியாக தினமும் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும்  சென்று வருகின்றனர். இந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் சிறுவர்கள் யாராவது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அவல நிலையில் இருந்தது. இதுகுறித்து, கடந்த 18ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், குழிப்பாந்தண்டலம் ஊராட்சி தலைவர் சுகுணா சுதாகர், துணை தலைவர் வேணுகோபால் சௌமியா ஆகியோர், மேற்கண்ட பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றை நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், அந்த ஆழ்துளை கிணற்றை மூடும்படி ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில், ஊராட்சி ஊழியர்கள், ஆழ்துளை கிணற்றுக்கு மூடி போட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்னர். மேலும், ஆழ்துளை கிணறு குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்….

The post மாமல்லபுரம் அருகே 5 ஆண்டுகளாக திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்கு மூடி appeared first on Dinakaran.

Related Stories: