பழுதான மோட்டாரை மீட்க முயன்றபோது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

*வந்தவாசி அருகே சோகம்

வந்தவாசி : வந்தவாசி அருகே பழுதான மோட்டாரை மீட்க முயன்றபோது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவண்ணமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன்(36), விவசாய கூலி தொழிலாளி. மழையூர் தாழம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விஜயபாரத்(45) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் நீர்மூழ்கி மின் மோட்டார் பழுதானது.

இதை கயிறு மூலம் இழுத்தபோது மண்ணில் சிக்கிக் கொண்டிருந்தால், மீட்க முடியவில்லையாம். இதனால் விஜயபாரத், பத்மநாபனை அழைத்து வந்தார். பத்மநாபன் டிராக்டர் மூலம் மின் மோட்டாரை மீட்கலாம் என கூறி உள்ளார்.பின்னர் விஜயபாரத்தின் உறவினர் ஐயப்பனுக்கு சொந்தமான டிராக்டர் மூலம் கயிறு கட்டி மின் மோட்டரை மீட்க பத்மநாபன் முயன்றுள்ளார். அப்போது டிராக்டரை பத்மநாபன் பின்னால் ஓட்டி வந்துள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக திடீரென கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டு டிராக்டர் கிணற்றின் உள்ளே விழுந்தது. டிராக்டருடன் பத்மநாபன் நீரில் மூழ்கினார். இதை பார்த்த விஜயபாரத் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கிணற்றில் மூழ்கிய பத்மநாபனை மீட்டனர். அதில் தலையில் பலத்த காயத்துடன் பத்மநாபன் இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர் பத்மநாபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் கிணற்றில் விழுந்த டிராக்டரை ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த பத்மநாபனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பத்மநாபன் மனைவி கலையரசி வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். டிராக்டருடன் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பழுதான மோட்டாரை மீட்க முயன்றபோது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: