செங்கல்பட்டு அருகே பாரேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

 

செங்கல்பட்டு, ஜன.22:செங்கல்பட்டு அருகே, பாரேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி பாரேரி ஏரி உள்ளது. இந்த ஏரியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டி வருகின்றனர். மேலும், உயிரிழந்த கால்நடைகளை அங்கு போட்டு விட்டு செல்கின்றனர்.

இதனால், அந்த ஏரி மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகின்றது. ஏரியில் மட்டும் இல்லாமல் அதனை சுற்றிலும் பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள் பல மாதங்களாக கொட்டி வருவதாலும், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதாலும் புழுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் இந்த ஏரியை கடக்கும்போது மூக்கை மூடிய படி கடந்து செல்கின்றனர்.

இதனால், பொதுமக்களுக்கு பல வகையான தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிங்கபெருமாள்கோவில் ஊராட்சி நிர்வாகம் அல்லது செங்கல்பட்டு மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பல மாதங்களாக தேக்கமடைந்துள்ள இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும், சிசிடிவி கேமராவை பொருத்தி குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டாமலும் சிறுநீர், மலம் கழிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு அருகே பாரேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: