24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு செய்து சாதனை: கோவை சிறுமிக்கு திருப்போரூரில் வரவேற்பு

 

திருப்போரூர், மே 26: தமிழில் 24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு செய்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனை புரிந்த கோவையை சேர்ந்த சிறுமி ஷன்வித்தாஸ்ரீக்கு திருப்போரூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் – கீதா தம்பதியர். இவர்களது மகள் ஷன்வித்தாஸ்ரீ (6). 1ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி கணினியில் அதிகம் ஆர்வம் கொண்டதால், அவரது தந்தையின் லேப்டாப்பை ெதாடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். கணினியின் தட்டச்சு பலகையில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே இருப்பதை பார்த்த சிறுமி, அதில் எப்படி தமிழ் எழுத்துக்கள் வருகிறது என்று யோசித்து தொடர்ச்சியாக கணினியில் தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்ய பயிற்சி எடுத்துக் கொண்டார். தற்போது 12 உயிர் எழுத்துகள், 18 மெய்யெழுத்துகள், 216 உயிர்மெய் எழுத்துகள், ஒரு ஆயுத எழுத்து மற்றும் ஓம் குறியீடு ஆகியவற்றை தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டு தற்போது 24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு செய்யும் அளவிற்கு திறன் பெற்றார்.

அவரது, இந்த திறமை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்று அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.  இந்நிலையில் சிறுமி ஷன்வித்தாஸ்ரீ, நேற்று திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை, கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அதேபோன்று திருப்போரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post 24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு செய்து சாதனை: கோவை சிறுமிக்கு திருப்போரூரில் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: