10ம் வகுப்பு தேர்ச்சியான மாணவர்கள் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

 

காஞ்சிபுரம், மே 26: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு, 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஜூன் 7ம்தேதி கடைசி நாளாகும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும். (SCVT) கம்மியர் மோட்டார் வாகனம் (SCVT) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், (SCVT) கம்மியர் மின்னணுவியல், (NCVT) மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி, (NCVT) அட்வான்ஸ்டு, CNC மிஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், (NCVT) மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் மற்றும் (NCVT) (இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்) பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.  பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, அரசு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷீ, இலவச பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும்.மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 97892 42292, 94999 37449, 94459 43451. போன்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post 10ம் வகுப்பு தேர்ச்சியான மாணவர்கள் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: