பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்: செங்கை கலெக்டர் பங்கேற்பு

செங்கல்பட்டு, மே 22: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லுரியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கி பேசியதாவது: வாக்கு எண்ணும் இடத்தில் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வாக்கு எண்ணும் மையத்திற்கான அடையாள அட்டைகள் வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணுகையிட முகவர்களுக்கு என தனித்தனியாக வழங்கப்படும். இம்மாதம் 30ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பெற்றுக்கொள்ள வேண்டும். 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 128ன் கீழ் வாக்குபதிவின் ரகசிய தன்மையை பாதுகாத்தல் தொடர்பான உறுதிமொழியில் (படிவம் 18ல்) கையொப்பமிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ஒப்படைக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு வர அனுமதியில்லை. எனவே வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணுகை முகவர்கள் செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். முகவர்கள் வாக்குச்சாவடியிலிருந்து பெற்ற படிவம் 1/சி, பேனா, பென்சில், நோட் பேட் கொண்டு வர அனுமதியுண்டு. வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும். அனைத்து வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் 4ம் தேதி காலை 7 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும். மேலும், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் காலை 7.15 மணியளவில் திறக்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணுகையிட முகவரும், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தவறாமல் அணிந்து வர வேண்டும். அடையாள அட்டை கொண்டு வராத முகவர்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. வாக்கு எண்ணுகையிட முகவர்கள் தங்களது அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையில் மட்டுமே இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று, வேட்பாளர்கள் உபயோகத்திற்காக பயன்படுத்தும் ஒரு வாகனத்தை, வாக்கு எண்ணும் மையத்தில் வாகனம் நிறுத்துவதற்காக காவல்துறையினரால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். வேறு எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது. வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்குரிய மதிய உணவினை அந்தந்த வேட்பாளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்கு எண்ணுகையிட முகவர்கள் உணவு உண்ணுவதற்கு அமர்ந்து சாப்பிடும் வகையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு பந்தல் அமைக்கப்படும். அந்த இடத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். மேற்படி இடத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும். குப்பைகள உரிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்ச்சியாக நடைபெறுவதால் வாக்கு எண்ணுகையிட முகவர்கள் உணவு அருந்துவதற்கென தனியாக நேரம் ஒதுக்கப்படாது.

வாக்கு எண்ணுகையிட முகவர்கள் சுழற்சி முறையில் உணவு அருந்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாக்கு எண்ணுகையிட முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நாளன்று உணவு வழங்கும் பொருட்டு ஒரு வேட்பாளுக்கு ஒரு வாகனத்திற்கான அனுமதியும் உணவுகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்ல (6 தொகுதிகளுக்கும் மொத்தம்) இரண்டு நபர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த வாகனம் மற்றும் உணவு விநியோகம் செய்யும் இரண்டு நபர்களை தவிர வேறு எவருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. (வாகன ஓட்டுநர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் செல்ல அனுமதி இல்லை).

இதற்குரிய வாகன அனுமதிச்சீட்டு மற்றும் 2 நபர்களுக்குக்கான அனுமதிச்சீட்டை 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. மேலும், தபால் வாக்கு எண்ணுமிடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் இயந்திரங்கள் எண்ணும் அறைக்குள் செல்ல அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணும் அறைக்குள் தேவையின்றி பேசுவதாலும் வாக்கும் எண்ணும் அறைக்குள் சத்தம் எழுப்புவதாலும், வாக்கு எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி முடிந்தவுடம், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அந்த வாக்குச்சவாடிகளுக்கான விவிபேட் ஸ்லிப்கள் எண்ணும் பணி மேற்கொள்ளப்படும். இந்த பணியானது வாக்கு எண்ணும் அறைகளில் உள்ள மேஜை எண்:14ல் நடைபெறும். வேட்பாளர்கள் சுற்று வாரியாக பெற்ற விவரங்கள் அந்தந்த அறையில் அமைக்கப்பட்டுள்ள ப்ளெக்ஸ் பேனரில் விவரங்கள் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகளில் உள்ள விவிபேட் ஸ்லிப்களை எண்ணும் பணி முடிந்த பிறகே இறுதி வாக்கு எண்ணும் முடிவினை தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும். மேல்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக நடத்தி முடிக்க அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்: செங்கை கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: