ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும்: தேர்தல் ஆணையம் கருத்து

புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க, 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்து, இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்த குழு ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது. மேலும் தேர்தல் ஆணையத்திடமும் கருத்து கேட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுள் 15 ஆண்டுகளாக மாறும். அப்படி இருக்கும் போது ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், ஒரு செட் இயந்திரத்தைப் பயன்படுத்தி மூன்று சுழற்சி முறை தேர்தல் நடத்த முடியும். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் மொத்தம் 11.80 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடக்கும்போது தேவைப்படும் மின்னணு இயந்திரங்கள் 46,75,100 ஆகும். மேலும் தேவைப்படும் கட்டுப்பாட்டு அலகுகள் 33,63,300. விவிபேட் எந்திரங்கள் 36,62,600 ஆகும். ஒரு மின்னணு இயந்திரம் விலை ரூ 7,900, கட்டுப்பாட்டு அலகு ஒன்றுக்கு ரூ 9,800. விவிபேட் யூனிட்டுக்கு ரூ 16,000 ஆக உள்ளது. எனவே 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னணு இயந்திரங்களை மாற்ற ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படும். இதன் அடிப்படையில் புதிய இயந்திரங்கள் வாங்குவதை வைத்து பார்க்கும் போது ஒரே நேரத்தில் முதல் தேர்தலை 2029ல் மட்டுமே நடத்த முடியும். மேலும் கூடுதல் வாகனங்கள், இருப்பு வைக்க அறை, கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளது.

* 5 சட்டப்பிரிவுகளில் மாற்றம் வேண்டும்
தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில்,’ மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, அரசியலமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படுகிறது. நாடாளுமன்ற அவைகளின் பதவிக்காலம் தொடர்பான சட்டப்பிரிவு 83, மக்களவையை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 85, மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் தொடர்பான சட்டப்பிரிவு 172, மாநில சட்டப்பேரவைகளை கலைப்பது தொடர்பான விதி 174, மாநில சட்டப்பேரவையை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 ஆகியவற்றில் மாற்றம் வேண்டும். மேலும் கட்சித் தாவல் காரணமாக தகுதி நீக்கம் செய்வது தொடர்பான அரசியலமைப்பின் 10வது அட்டவணையில் தேவையான மாற்றங்கள் தேவைப்படும்’ என்று பரிந்துரை செய்துள்ளது.

* அரசியல் கட்டமைப்பை சேதப்படுத்தும்: ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு, நாட்டின் கூட்டாட்சி அமைப்பு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும். தொங்கு சட்டசபையை சமாளிக்க முடியாமல்,தீவிரமாக செயல்படும் கட்சித்தாவல் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை வெளிப்படையாக வாங்குதல் -விற்பது போன்ற தீய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் செலவானது ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் வெறும் 0.1சதவீதம் மட்டுமே. குறுகிய நிதி ஆதாயங்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை தியாகம் செய்ய முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும்: தேர்தல் ஆணையம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: