ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் லிண்டா: நம்பர் 1 இகா அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவுடன் மோதிய நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலக தரவரிசையில் 50வது இடத்தில் இருக்கும் லிண்டா (19 வயது) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தாலும், பின்னர் அதிரடியாக விளையாடி 6-3, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி ஸ்வியாடெக்கை வெளியேற்றினார். கிராண்ட் ஸ்லாம் தொடரின் 4வது சுற்றுக்கு லிண்டா முதல் முறையாக முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 3வது சுற்றில் லாத்வியா நட்சத்திரம் யெலனா ஆஸ்டபென்கோவுடன் நேற்று மோதிய விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்) 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

முன்னணி வீராங்கனைகள் எலனா ஸ்விடோலினா (உக்ரைன்), அன்னா கலின்ஸ்கயா (ரஷ்யா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), கின்வென் ஸெங் (சீனா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ரஷ்யாவின் டானில் மெத்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் கனடா வீரர் ஆகர் அலியஸிமியை வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), கேமரான் நோரி (இங்கிலாந்து) ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவ் 7-6 (7-3), 4-6, 2-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜசிடம் போராடி தோற்றார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் லிண்டா: நம்பர் 1 இகா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: