சுற்றுலா தலங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்

 

ஊட்டி, ஜன.10: நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மத்தியில் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இம்முகாம் நடைபெற்றது. இதில், வழக்கறிஞர்களை வைத்து வழக்கு நடத்த முடியாத ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கிட சட்டப்பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டது.

மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து அவற்றின் தகுதியை தீர்மானிப்பது, சிறைகளுக்கு வழக்கறிஞர்களை அனுப்பி, அங்குள்ள சிறைவாசிகளுக்கு சட்ட உதவி வழங்குதல், சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்தி கிராம மற்றும் பாமர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு பெறுதல் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர், பட்டியல் பழங்குடியினர், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23ல் குறிப்பிட்ட மனிதர்களை விற்பதும், வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவதால் பாதிக்கப்பட்ட நபர், பிச்சை எடுப்பவர், பெண் அல்லது குழந்தை, ஊனமுற்றோர், பேரழிவு, இன வன்முறை, சாதி வன்கொடுமை, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் சட்ட உதவிகள் பெற தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட, வட்ட அளவில் நீதிமன்ற வளாகங்களில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா தலங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: