ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

ஊட்டி : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அறிவியல் கருத்தரங்கு ஊட்டி பிரிக்ஸ் நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரவணசுந்தர் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு சிறப்பு அழையப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:இன்றைய அறிவியலில் பரவலாக விவாதிக்கப்படும் பொருள் தற்போது அறிமுகம் ஆகியுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சமுதாயத்திற்கு நன்மையா அல்லது தீமையா என்பது ஆகும். இந்த தொழில் நுட்பத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

ஆனால், சில விஞ்ஞானிகள் இக்கருத்து தவறானது. இதுவரையில் மனித சமுதாயம் காணாத வகையில் புதிய தொழில் நுட்பங்களும் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என கூறுகின்றனர். கம்யூட்டர் வந்த பின்னர் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் உருவானது குறிப்பிடத்தக்கது. ஸ்டீபன் ஹாக்கிங் என்ற உலக புகழ்பெற்ற விஞ்ஞானி தன்னுடைய கண் தசைகளை அசைப்பதன் மூலம் கம்யூட்டரை இயக்கியதும், அதன் மூலம் பேசியதும் செயற்கை நுண்ணறிவால் தான்.

கண் பார்வையற்றவர்கள் எழுத, படிக்க, மற்றவர்களை எளிதில் அடையாளம் காணவும் முடியும். வாத நோயால் கை, கால் மற்றும் பேச முடியாத நோயாளிகள் தங்கள் கண்ணசைவின் மூலம் கம்ப்யூட்டர்களை இயக்கலாம். பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பேசலாம். மேலும் ஒருவர் எந்த மொழியில் பேசினாலும் கேட்பவருடைய தாய் மொழியில் உடனுக்குடன் மொழி பெயர்த்து கொடுக்கும். விவசாயம் போன்ற பல துறைகளிலும் இந்த நவீன தொழில் நுட்பம் பல அதிசயங்களை நிகழ்த்தும்.

கதை, கவிதை மற்றும் கட்டுரைகளை தலைப்பை சொன்னவுடன் அடுத்த வினாடியே செயற்கை நுண்ணறிவு கம்யூட்டர் எழுதி கொடுக்கும். வீட்டு வேலை, வாகனம் இயக்குதல் போன்ற பல வேலைகளை ரோபோக்களே செய்யும். ஒரு குழந்தையின் மலத்தை படமெடுத்தால் அடுத்த நொடியே அந்த குழந்தையின் நோய் குறித்தும் கொடுக்க வேண்டிய மருந்து குறித்தும் செல்போன் மூலம் அறியலாம்.

இது போன்ற சிக்கலான கம்யூட்டர் மொழிகளை படித்தவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில், சிக்கல் ஏற்படும், என்றார். முன்னதாக அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சிவன் வரவேற்றார். சிவக்குமார் நன்றி கூறினார்.

The post ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: