வெள்ள பாதிப்பு மாவட்டங்களில் கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? நிர்மலா சீதாராமனுக்கு சபாநாயகர் அப்பாவு கேள்வி

ஆறுமுகநேரி: வெள்ள பாதிப்பு மாவட்டங்களில் கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேளுங்கள் என்று சபாநாயகர் தெரிவித்தார். தூத்துக்குடி ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட நிவாரண பொருட்களை சபாநாயகர் அப்பாவு நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தெலங்கானாவில் ஆளுநராகவும், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராகவும் இருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜன், அந்த மாநிலங்களில் எவ்வளவு நேரம் பணி செய்கிறார் என்பது தெரியவில்லை. அவ்வப்போது தமிழகத்திலேயே இருந்து வருகிறார். முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ரயில்வே துறை, ரயிலை இயக்காமல் பாதுகாத்திருக்கலாம். தற்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுமார் 8 கி.மீ. தூரம் மட்டுமே தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை 10 நாட்களாகியும் சரி செய்யவில்லை. டிச.31ம் தேதி வரை திருச்செந்தூர் – நெல்லை ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

இது ஒன்றிய அரசின் இயலாமையை குறிக்கிறது. தூத்துக்குடி எப்சிஐ குடோனில் 13 ஆயிரம் டன் அரிசி வீணாகி உள்ளது. இதையும் ஒன்றிய அரசு பாதுகாக்க தவறிவிட்டது. சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்காக நிதி வழங்காமல், பிரதமர் மோடி நேரில் வராமல் இருப்பது தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக தெரிகிறது. நிவாரண தொகையை வங்கியில் செலுத்தினால் மினிமம் பேலன்ஸ், ஏடிஎம், எஸ்எம்எஸ் கட்டணம் என எவ்வித பணமும் பிடித்தம் செய்யாமல் இருக்க முடியுமா?.

அதனால்தான் பணம் நேரடியாக வழங்கப்படுகிறது. வெள்ள பாதிப்பு மாவட்டங்களில் கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேளுங்கள். ஒன்றிய நிதி அமைச்சரை யார் அழைத்து வருகிறார் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து பிரதமரிடம் அறிக்கை கொடுத்து தமிழக மக்களுக்கு தேவையான நிதிகளை தந்தால் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் என்றார்.

The post வெள்ள பாதிப்பு மாவட்டங்களில் கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? நிர்மலா சீதாராமனுக்கு சபாநாயகர் அப்பாவு கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: