பொன்முடி வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிய நீதியை பெறுவோம்: திமுக மிக பலமாக இருப்பதை பார்த்து பாஜ பயப்படுகிறது; சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் பொன்முடி மீதான தீர்ப்பு குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதில் அவர் விடுதலை செய்யப்படுவார். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், சாட்சியங்கள் அடிப்படையில் மிக லாபகரமாக பொன்முடியின் மனைவி தொழிலை நடத்தி வந்தார் என்பதும், வருடத்திற்கு ரூ.5 கோடி அளவிற்கான வியாபாரம் செய்து வந்துள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி விடுதலையை ரத்து செய்து தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. திமுக சட்டத்துறை சார்பில் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றுத்தரப்படும்.

நீதிபதி என்பவர் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத்தின் அடிப்படையில், அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது இந்த வழக்கில் இந்த சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார். இந்த வழக்கு நடக்கும் போது அது தெரியவில்லை, நேற்றைக்கு தான் பொன்முடிக்கு தெரிய வந்தது. அதை நீதிபதியிடம் எடுத்து சொன்னோம். அப்போது நீதிபதி முன்னரே இதை தெரியப்படுத்தியிருந்தால்கூட இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன் என கூறினார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்னை. அந்த பிரச்னையை நாங்கள் நிச்சயம் உச்சநீதிமன்றத்திலும் எடுத்து வைப்போம்.

ஆவணங்களின் அடிப்படையில் பொன்முடியின் மனைவிக்கு வருடத்திற்கு ரூ.5 கோடி அளவிற்கு வருமானத்தை ஈட்டும் தொழில் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம். குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறியிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிய நீதியை பெறுவோம். கொடுக்கப்பட்டிருக்கும் 30 நாட்களில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவோம். மேலும் , இந்த தண்டனையை நிறுத்தி வைக்க முயற்சி செய்வோம். அப்படி உச்சநீதிமன்றம் சார்பில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதி இழப்பு என்பது இல்லாமல் ஆகிவிடும். திமுக மிக பலமாக இருக்கிறது. அதை கண்டு பாஜக பயப்படுகிறது என்பது தான் எதார்த்தம். 2024க்கு பிறகு பாஜ வை சேர்ந்தவர்களின் பட்டியல்களும் வெளிவரும்.

The post பொன்முடி வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிய நீதியை பெறுவோம்: திமுக மிக பலமாக இருப்பதை பார்த்து பாஜ பயப்படுகிறது; சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: