தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் த மிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது மிகத் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ளபடி தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மாவட்டங்களில் 200 மிமீ முதல் 500 மிமீ வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது.

அதன்படி நேற்று ஒரே நாளில் திருநெல்வேலியில் 350 மிமீ மழை கொட்டித் தீர்த்தது. மேலும் மற்ற 3 மாவட்டங்களிலும் மழை மிக கனமழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது தவிர ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

கடந்த வாரம் வட தமிழகத்தில் நான்கு மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை தற்போது தென் மாவட்டங்களில் 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது.  இந்நிலையில், சென்னை, ஈரோடு, கரூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதைஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சிநிலை கொண்டுள்ளதால், தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இது தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்தபகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: