டென்னிஸ் பந்து போட்டி: 2024 மார்ச்சில் தொடங்குகிறது ஐஎஸ்பிஎல் 10 ஓவர் கிரிக்கெட்; விளையாடனுமா? வீடியோ போடுங்க!

மும்பை: தெருவில் விளையாடிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து அரங்கத்தில் ஆட வைக்கும் புதிய முயற்சியாக ‘ஐஎஸ்பிஎல் டென்னிஸ் பந்து டி10’ கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ‘இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் ( ஐ.எஸ்.பி.எல்) அமைப்பின் நிர்வாகிகள் பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷீலர், மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே கூறியதாவது: இன்று பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் முதலில் மும்பை உட்பட பல்வேறு நகரங்களின் தெருக்களிலும், சந்துகளிலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான்.

பிறகு படிப்படியாக முன்னேறி வாய்ப்பு பெற்று, இன்று சர்வதேச வீரர்களாக உள்ளனர். கவாஸ்கர் முதல் இன்று டி20யில் கலக்கும் சூரியகுமார், ரிங்கு உட்பட பலரும் தெருக்களில் டென்னிஸ் பந்துகளில் விளையாடியவர்கள் தான் . அதனை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கின்ற 19 வயதுக்குட்பட்ட வீரர்களை கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளிக் கொண்டுவர ஐஎஸ்பிஎல் என்ற டென்னிஸ் பால் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கிறோம்.

வரும் மார்ச் 2 முதல் 9 வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, ஸ்ரீநகர் நகரங்களை மையமாகக் கொண்ட 6 அணிகள் உருவாக்கப்பட உள்ளன. பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் டிச.20க்குள் www.ispl-t10.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தலா 45 வினாடிகள் கொண்ட 4 வீடியோக்களை பதிவேற்ற வேண்டும். ஒன்றில் சுய விவரங்களையும் மற்ற 3 வீடியோக்கள் விளையாட்டுத் திறமைகள், சிறப்பு தன்மைகளை குறித்த வெளிப்பாடாக அமைய வேண்டும். டிச.20ஆம் தேதிக்கு பிறகு தகுதி வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அணிகள் வாரியாக பிரிக்கப்படுவார்கள். நாட்டில் இது புதிய முயற்சியாக அமையும்.

The post டென்னிஸ் பந்து போட்டி: 2024 மார்ச்சில் தொடங்குகிறது ஐஎஸ்பிஎல் 10 ஓவர் கிரிக்கெட்; விளையாடனுமா? வீடியோ போடுங்க! appeared first on Dinakaran.

Related Stories: