மும்பையில் முதல் அரையிறுதி இந்தியா – நியூசிலாந்து பலப்பரீட்சை

கொல்கத்தா: ஐசிசி உலக கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவதுடன் மொத்த ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தையும் முந்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் பாகிஸ்தான் களமிறங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன் குவித்தது. மலான் 31, பேர்ஸ்டோ 59 ரன் (61 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜோ ரூட் 60 ரன் (72 பந்து, 4 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 84 ரன் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பட்லர் 27, ஹாரி புரூக் 30, வில்லி 15 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 3, ஹாகீன் அப்ரிடி, முகமது வாசிம் தலா 2, இப்திகார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், 6.4 ஓவரிலேயே 338 ரன் என்ற இலக்கை எட்டினால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கனவிலும் சாதியமில்லாத ஒரு சவாலை சந்தித்தது. அந்த அணி 6.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன் மட்டுமே எடுத்ததால், முதல் அரையிறுதியில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவும் 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுவது உறுதியானது. பரபரப்பான இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவ. 15ல் நடைபெற உள்ளது. நவ.16ல் கொல்கத்தாவில் நடக்க உள்ள 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா மோத உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நவ. 19ல் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

 

The post மும்பையில் முதல் அரையிறுதி இந்தியா – நியூசிலாந்து பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: