வெள்ளிவாயல் சாவடியில் உடையும் நிலையில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையை நேரில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ: சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பொன்னேரி: வெள்ளி வாயல் சாவடி ஊராட்சியில், கொசஸ்தலை ஆற்றின் கரை உடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளி வாயல் சாவடி ஊராட்சியில் துர்கன் கிராமம் மற்றும் காலனி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கொசஸ்தலை ஆற்றின் கரை அருகே வசித்து வருகின்றனர்.

தற்போது 25 அடி உயரமும் 30.அடி அகலமும் கொண்ட கொசஸ்தலை ஆற்றின் கரை தற்போது பலம் இழந்து கரையின் அகலம் 5அடியாக சுருங்கி உள்ளது. மேலும், ஆற்றின் கரை தற்போது உடையும் நிலையில் உள்ளது. துர்கன் காலனி மற்றும் கிராம பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் முச்செடிகள் வளர்ந்து இருப்பதால் கரை தெரியவில்லை. வருகிற மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரை உடையும் அபாயம் உள்ளது. இதனால், தண்ணீர் நிரம்பி வழிந்து கிராமத்தில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே, வெள்ளி வாயல் ஊராட்சி, துர்கன் காலனி கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்று மதியம் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக ஆற்றின் கரையை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அவரிடம் உடனடியாக பணி தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நந்தகுமார், மேற்பார்வையாளர் சங்கர், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி, ஊராட்சி மன்ற தலைவர் உமையாள், ஊராட்சி செயலர் சுதாகர், வார்டு உறுப்பினர்கள் மாரியம்மா டேனியல், ரீட்டாகஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

The post வெள்ளிவாயல் சாவடியில் உடையும் நிலையில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையை நேரில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ: சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: