இலங்கை ஹாட்ரிக் தோல்வி: முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸி.

லக்னோ: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதிய ஆஸ்திரேலியா, 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. வாஜ்பாய் ஏகனா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. பதும் நிசங்கா, குசால் பெரேரா இணைந்து இலங்கை இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டு ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் அரை சதம் விளாசியதுடன், முதல் விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இலங்கை 300+ ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… நிசங்கா 61 ரன் (67 பந்து, 8 பவுண்டரி) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் வார்னர் வசம் பிடிபட்டார்.

அதன் பிறகு குசால் பெரேரா கேப்டன் மெண்டிஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 32 ரன் சேர்த்தது. குசால் பெரேரா 78 ரன் (82 பந்து, 12 பவுண்டரி) விளாசி கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, ஆஸி. தரப்பு உற்சாகம் அடைந்தது. குசால் மெண்டிஸ் 9 ரன், சமரவிக்ரமா 8 ரன் எடுத்து ஆடம் ஸம்பா சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இலங்கை வீரர்களை பதற்றம் பற்றிக்கொண்டது. ஒரு முனையில் சரித் அசலங்கா உறுதியுடன் போராட, சக பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுப்பு நடத்தினர். சரித் அசலங்கா 25 ரன் எடுத்து (39 பந்து, 1 சிக்சர்) மேக்ஸ்வெல் சுழலில் லாபுஷேன் வசம் பிடிபட… இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி கடைசி 84 ரன்னுக்கு 10 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 4, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2, மேக்ஸ்வெல் 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
மோசமான வானிலை காரணமாக ஆஸி. இன்னிங்ஸ் தொடங்குவதில் சற்று தாமதமானது. மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் இணைந்து துரத்தலை தொடங்கினர். மதுஷங்கா வீசிய 4வது ஓவரில் வார்னர் (11 ரன்), அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் (0) இருவரும் விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸி. 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. எனினும், மார்ஷ் லாபுஷேன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. மார்ஷ் 52 ரன் (51 பந்து, 9 பவுண்டரி) விளாசி, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஆஸ்திரேலியா 14.3 ஓவரில் 81 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், லாபுஷேன் ஜோஷ் இங்லிஸ் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இங்லிஸ் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தது. லாபுஷேன் 40 ரன் (60 பந்து, 2 பவுண்டரி) எடுத்து மதுஷங்கா பந்துவீச்சில் கருணரத்னே வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் நம்பிக்கையுடன் அடித்து விளையாடி ரன் சேர்க்க, ஆஸ்திரேலியா வெற்றியை நெருங்கியது. இங்லிஸ் 58 ரன் (59 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெல்லாலகே பந்துவீச்சில் தீக்‌ஷனா வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஆஸ்திரேலியா 35.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 31 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 20 ரன்னுடன் (10 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா 3 விக்கெட் (9-2-38-3), வெல்லாலகே 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து பின்தங்கியுள்ள நிலையில், ஆஸி. புள்ளிக் கணக்கை தொடங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

The post இலங்கை ஹாட்ரிக் தோல்வி: முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸி. appeared first on Dinakaran.

Related Stories: