காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது: கூடுதல் தண்ணீர் திறக்க கோரி வலியுறுத்த தமிழ்நாடு அரசு திட்டம்

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன. எனவே எஞ்சிய குறுவை பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி பணிகளை தொடங்கவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டிய நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை என தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 16 நாட்களுக்கு நீர் திறக்கக் கர்நாடகாவுக்கு உத்தரவிடக் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

The post காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது: கூடுதல் தண்ணீர் திறக்க கோரி வலியுறுத்த தமிழ்நாடு அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: