அதன்பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், கோயிலுக்கு சொந்தமான 85 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த இடத்தை காலி செய்யுமாறு ஜெயபாலுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், ஜெயபால் இதை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்து இருந்தார். பலமுறை வற்புறுத்தியும் அவர் கோயில் இடத்தை காலி செய்யாமல் இருந்தார். எனவே, அறநிலையத் துறை சார்பில் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, நிலத்தை மீட்க வேண்டும் என்று, சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்பேரில், அறநிலையத் துறை உதவி ஆணையர் நித்யா, கோயில் செயல் அலுவலர் சக்தி ஆகியோர், நேற்று 2 பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர். முன்னதாக, அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட மாடுகளை பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி, வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு கட்டிடத்திற்கு சீல் வைத்து, இந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அத்துமீறு ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பதாகை வைத்தனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட இடத்திற்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மீட்கப்பட்ட இந்த கோயில் நிலத்தின் மார்க்கெட் மதிப்பு ₹63 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர் கத்திப்பாரா ஜிஎஸ்டி சாலையில், (சர்வே எண் 489/3 ஏ) அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் கடந்த 1967ம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இங்கு டாஸ்மாக், பார், ஒட்டல், டீக்கடை என 17 கடைகளுடன் வணிக வளாகமாக செயல்பட்டது. இந்நிலையில், குத்தகை முடிந்த பின், மதுக்கடை, ஒட்டல்கள் உள்ளிட்ட சில கடைகள் மூடப்பட்டது. தற்போது சில கடைகள் இதுவரை செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் ₹35 கோடி அரசுக்கு இழப்பீடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று காலை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் முன்னிலையில், வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வந்து சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடத்தில் கடைகளின் பூட்டை உடைத்து அகற்றிய பின், வருவாய் துறையினர் பூட்டு போட்டு கடைகளுக்கு சீல் வைத்தனர். இதன்மூலம் ₹150 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post போரூர், ஆலந்தூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ.218 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.
