சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஒன்றிய அரசிற்கு உரிய ஆலோசனை வழங்கவும், ஒன்றிய ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய ஆலோசனை வாரியத்தின் 8வது குழுக் கூட்டம் டெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மைய வளாகத்தில், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், துறையின் இணை அமைச்சர் பி.எல்.வர்மா மற்றும் பிற மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிர்வகிக்கும் தமிழ்நாடு முதல்வரின் சார்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நலத்துறையின் ஆணையர்-அரசு சிறப்பு செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை எம்.லஷ்மி கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல முன்னோடி திட்டங்களை எடுத்துரைத்து சில முக்கிய கோரிக்கைகளை ஒன்றிய அரசின் பரிசீலனைக்காக முன்வைத்தார். குறிப்பாக மாநில யு.டி.ஐ.டி ஒருங்கிணைப்பாளர் ஊதிய நிலுவைத் தொகையான ரூ.9 லட்சம், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் ஒதுக்கப்பட்ட ரூ.50 கோடி கடன் உதவி நிதியை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு விரைவில் விடுவித்திட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
