சென்னை: புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை செயலக சங்க நிர்வாகிகளிடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களிடையே நிலவும் சந்தேகங்களை நீக்கும் வகையில், தமிழக அரசு, ஓய்வூதியத்தில் உறுதியான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 3ம் தேதி அறிவித்தது.
இந்த திட்டம் ஊழியர்களுக்கு நன்மை தரும் வகையில் இருக்கும் என அரசு தரப்பில் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்களுக்காக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தின் சில அம்சங்கள் குறித்த தெளிவான விளக்கங்கள் இன்னும் வெளியிடவில்லை என சங்க உறுப்பினர்களில் ஒரு பகுதி அதிருப்தி தெரிவித்து தலைமை செயலக சங்க அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். பழைய ஓய்வூதிய திட்டத்தில் பிடிக்கப்பட்ட தொகை தொடர்பான அறிவிப்பை அரசு இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
