இறுதி போட்டியில் இன்று இந்தியா – இலங்கை மோதல்: ஆசிய கோப்பை யாருக்கு?

* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), விராத் கோஹ்லி, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அக்சர் படேல், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

* இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), சரித் அசலங்கா, மதீஷா பதிரணா, பதும் நிசங்கா, தனஞ்ஜெயா டிசில்வா, கசுன் ரஜிதா, திமத் கருணரத்னே, சதீரா சமரவிக்ரமா, துஷான் ஹேமந்தா, குசால் பெரேரா, பினுரா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷன், சஹான் அராச்சிகே.

கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பரபரப்பான பைனலில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த 16வது ஆசிய கோப்பை தொடர், இந்திய அணி அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டதை அடுத்து பாகிஸ்தான் – இலங்கை இணைந்து நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அணிக்கான அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்தப்பட்டன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் முதற்கட்ட லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

அடுத்து சூப்பர்-4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. இந்த சுற்றில் நடந்த லீக் போட்டிகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடந்த சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் இந்தியா போராடி தோற்றாலும், இன்றைய பைனலில் இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டிருந்த கோஹ்லி, ஹர்திக், பும்ரா, குல்தீப், சிராஜ் ஆகியோர் பைனலில் விளையாட உள்ளதால் இந்தியா முழு பலத்துடன் இலங்கை சவாலை சந்திக்கிறது. ஆல் ரவுண்டர் அக்சர் படேல் காயம் காரணமாக அவதிப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றொரு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் உடனடியாக இலங்கை சென்று அணியினருடன் இணைந்துள்ளார். சூப்பர்-4 சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக சற்று தடுமாற்றம் கண்டதால், இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே சாம்பியன் பட்டம் சாத்தியமாகும்.

இந்திய அணி 11வது முறையாக பைனலில் விளையாட உள்ள நிலையில், 13வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் நடப்பு சாம்பியன் இலங்கை அணி கோப்பையை தக்கவைத்து சாதனை படைக்க வரிந்துகட்டுகிறது. சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப் பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும், சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இலங்கை வீரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post இறுதி போட்டியில் இன்று இந்தியா – இலங்கை மோதல்: ஆசிய கோப்பை யாருக்கு? appeared first on Dinakaran.

Related Stories: