ஜார்கண்ட் மாநில நிதியமைச்சரின் மகன் வீட்டில் ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில நிதியமைச்சரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில நிதியமைச்சருமான ராமேஷ்வர் ஓரோனின் மகன் ரோஹித் ஓரான் மற்றும் சிலருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநிலத் தலைநகர் ராஞ்சி, தும்கா, தியோகர், கோடா மாவட்டங்களில் உள்ள சுமார் 34 இடங்களில் சிஆர்பிஎப் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனையிட்டு வருகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தொடர்புடைய அமைச்சரின் மகன் ரோஹித் ஓரான் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட மதுபான வியாபாரிகளின் வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்றன. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் வணிக வரி துறைகளின் அமைச்சராக ராமேஷ்வர் ஓரோன் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே இவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சராகவும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜார்கண்ட் மாநில நிதியமைச்சரின் மகன் வீட்டில் ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: